Home Uncategorized திருவெம்பாவை 4

திருவெம்பாவை 4

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்து எண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய். விளக்கம்:

வீட்டுக்கு வெளியேயும் உள்ளேயுமான உரை யாடல் இப்பாடலிலும் தொடர்கிறது: ஒளிபொருந்திய முத்துப் பற்களுடன் சிரிக்கும் பெண்ணே! இன்னுமா உனக்குப் பொழுது விடிய வில்லை?’ என்று நீராட அழைக்கும் பெண்கள் வெளியே நின்று கேட்கிறார்கள். உள்ளிருக்கும் பெண், ‘‘கிளிபோல் பேசும் இனிய சொற்களையுடைய எல்லாத் தோழிகளும் வந்தாயிற்றா?’ என்று விசாரிக்கிறாள்.

(வராவிட்டால் இன்னும் கொஞ்சம் உறங்கலாமே என்ற எண்ணம்தான்!) வந்தவர்களோ, ‘‘அடியே! உன்னை எழுப்ப வந்த பெண்கள் எத்தனை பேர் என்று நாங்கள் ஏன் எண்ணிச் சொல்லவேண்டும்? உறக்கத்தில் ஈடுபட்டுப் பயனில்லாமல் பொழுதைப் போக்காதே.

நாங்கள் தேவர்களின் மருந்தாகவும், வேதப் பொருளாகவும் கண்ணுக்கு இனியவனாகவும் இருக்கும் சிவனைப் பாடி உள்ளம் நெக்குருக நிற்கும் வேளை இது. இந்நேரத்தில் வந்திருப்பவர்களையா எண்ணிக் கொண்டிருக்க முடியும்? நீயே வந்து எத்தனை பேர் என்பதை எண்ணிப் பார். நீ எதிர்பார்க்கும் அளவுக்கு இங்கே பெண்கள் இல்லை என்றால், மீண்டும் போய் உறங்கு!` என்று கேலி செய்கின்றனர். (இறைவனை அடையப் போட்டி போட வேண்டும். அடுத்தவர்களை விமர்சித்துக் கொண்டிருந்தால் இறைநாட்டம் நிறைவேறாது.

ஒவ்வொருவரும் அவரவரின் தனித் தன்மையை வளர்த்துக் கொண்டு இறைவனை அடைய முயற்சி செய்ய வேண்டும் என்பதே இப்பாடலின் கருத்து.)

Exit mobile version