வரும் 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை வாக்காளராக தகுதிப்படுத்தும் நாளாகக் கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக நடக்கவுள்ள வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் குறித்த சிறப்பு முகாம்களை நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
வாக்காளர் பட்டியல்
அதன்படி, வரும் நவம்பர் மாதம் 13 மற்றும் 14-ம் தேதிகளிலும் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை), 27 மற்றும் 28-ம் தேதிகளிலும் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) என 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
எனவே இந்த நாட்களில் முகாம்கள் நடத்தப்படுவது குறித்து அவரவர் மாவட்டங்களில் விளம்பரம் செய்யப்பட வேண்டும். வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம், இடமாற்றம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கான விண்ணப்பங்கள் போதுமான அளவில் வைக்கப்பட வேண்டும்.
சிறப்பு முகாம் நடக்கும் அந்த 4 நாட்களிலும் வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள் பணியில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
சிறப்பு முகாம்களுக்கான பணிகளை செய்யும்போதும், சிறப்பு முகாம்கள் நடக்கும்போதும் கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது.

