தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் அதன் உச்சத்தைத் தொடத் தொடங்கியுள்ள நிலையில், ராயலசீமா, வட கர்நாடகாவின் உட்பகுதிகள், தெலுங்கானா மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடும் வெப்ப அலை (Heat Wave) வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாகத் தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருத்தணி, சேலம், கரூர், நாமக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்;
சென்னையைப் பொறுத்தவரை 36 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாவதுடன், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் உடல் சோர்வும் புழுக்கமும் வாட்டி வதைக்கும். பொதுமக்கள் போதிய அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதேவேளையில், வெப்பச்சலனம் காரணமாக மத்திய மற்றும் வட ஆந்திரா, தெற்கு கர்நாடகாவின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாகத் தெற்கு கேரளாவின் திருச்சூர், இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, கண்ணூர், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்யக்கூடும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, கொடைக்கானல், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
