சென்னை விமான நிலையத்துக்கு வாகனங்கள் உள்ளே சென்று வர சென்னை விமான நிலைய நுழைவு வாயிலில், டோல்கேட் அமைத்து கட்டணம் வசூலித்து வருகின்றனர்.
பெரும்பாலும் விமான நிலைய நுழைவு வாயிலில் உள்ள டோல்கேட்டில் பணிபுரியும் ஊழியர்கள் விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளிடம் தொடர்ந்து அடாவடியாக நடந்து கொள்வது வாடிக்கையாக இருந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதற்கு எடுத்துகாட்டாக, சென்னை விமான நிலையத்தில் டோல்கேட் ஊழியர்கள் அடாவடியாக நடந்து கொண்டதாகவும், பணம் பறிப்பதே குறிக்கோளாக இருந்ததாகவும், மயிலாடுதுறை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா குற்றச்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கால் டாக்சி ஓட்டுநர்கள், ‘எதற்கெடுத்தாலும் பணம் பறிப்பதிலேயே சென்னை விமான நிலைய டேல்கேட் ஊழியர்கள் குறியாக உள்ளனர்’ என்றும் குற்றம் சாட்டுகின்றனர். நாள்தோறும் 57,000 பயணிகளும், 47,000 பார்வையாளர்களும் வந்து செல்லும் இடமாக சென்னை விமான நிலையம் உள்ள நிலையில், பார்க்கிங் வசதி, டோல்கேட் குளறுபடிகளால் பயணிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக கால்டாக்சி ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். விமான நிலையத்திற்குள் 10 நிமிடத்திற்குள் வந்து சென்றால் கட்டணம் இல்லை என்பதால் வேண்டுமென்றே நேரத்தை விரயமாக்கி டோல்கேட் ஊழியர்கள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

