தமிழக முதலமைச்சராகத் தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றவுடன் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தனது தேர்தல் வாக்குறுதிப்படி கொண்டு வந்த ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டத்தின் தொடக்க விழா, அவரது மேலாளர் ஜெகதீஷின் இல்ல விழாவுக்காக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
கருப்புத் தொப்பி, கருநீலச் சட்டை, காக்கி பேண்ட், கருப்பு பெல்ட் மற்றும் சிங்க முகச் சின்னம் எனப் பெண்களின் தைரியத்தைப் பிரதிபலிக்கும் தனித்துவமான சீருடையுடன் வடிவமைக்கப்பட்ட இந்தச் சிறப்புப் படையின் தொடக்க விழா, முதலமைச்சரின் டெல்லி பயணத்தால் ஏற்கனவே ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (மே 29) மாலை சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறவிருந்த விழாவுக்கான ஒத்திகைகள் மற்றும் ஏற்பாடுகள் முழுவீச்சில் முடிந்த தருவாயில் திடீரென மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிர்வாகக் காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், ஜெயலலிதாவுக்கு சசிகலா, ஸ்டாலினுக்கு சபரீசன் போல விஜய்க்கு நிழலாக இருக்கும் அவரது அன்-அபீஷியல் மேலாளர் ஜெகதீஷின் இல்ல விழாவில் பட்டு வேட்டி, சட்டையுடன் பங்கேற்பதற்காகவே முதலமைச்சர் விஜய் இந்த முக்கியத் திட்டத்தைத் தள்ளி வைத்துள்ளார் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.
தவெக அரசு பதவியேற்றது முதல் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகளைத் தொடர்ந்து தோலுரித்து வரும் எதிர்க்கட்சிகள், ஜெகதீஷ் வீட்டு விழாவுக்குப் போய்விட்டு அதே பட்டு உடையில் தலைமைச் செயலகம் வந்து அரசுப் பணிகளை கவனித்த முதலமைச்சரின் இந்தச் செயலைத் தீவிரமாகச் சாடுவதால், பெண்களின் பாதுகாப்புத் திட்டத்தில் காட்டிய இந்த அலட்சியப் போக்கு பொதுமக்கள் மத்தியிலும் ஒருவித அதிருப்தியையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது.

