எழுந்திரு, விழித்திரு, உன் லட்சியத்தை நீ அடையும் வரை நிற்காதே.
நீ என்ன நினைக்கிறாயோ, அதுவாகவே மாறுகிறாய். உன்னை பலவீனமானவனாக எண்ணினால், பலவீனம் அடைகிறாய். பலம் கொண்டவனாக எண்ணிக்கொண்டால், பலசாலி ஆகிறாய்.
ஒரு லட்சியத்தை நிர்ணயித்துக்கொண்டு அதையே உன் வாழ்க்கையாக்கிக்கொள். அதையே சிந்தித்திரு. அதை நோக்கியே பயணம் செய். அதற்காக நேரத்தை செலவிடு. உன் லட்சியத்தை நீ சென்றடைவாய்.
ஒரு நாயகனாய் உன் வாழ்க்கையை நடத்து. எதைக் கண்டும் அஞ்சாதே. நேர்மையான பாதையில் வாழ்க்கையை நடத்து.
ஒரு நேரத்தில் ஒரு பணியில் கவனத்தை செலுத்து. அதில் உன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் அர்ப்பணித்து விடு.
உன் மேல் நம்பிக்கைக் கொள். அது உன்னை உயர்த்தும்.
இது போன்ற சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையின் பல சம்பவங்கள் நமக்கு வாழ்க்கைக்கான மிகப்பெரிய வழிகாட்டுதல்களாக இருந்துள்ளன. ஒரு மனிதனின் தோற்றமோ, ஆடையோ அவனது அடையாளமல்ல. அவனது சொல்லும் செயலும் எண்ணமுமே அவனது அடையாளம் என்பதைக் கடல் கடந்து சென்று அமெரிக்காவில் உணர்த்தியவர் அவர். 1893 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் சிகாகோவில் (Chicago), உலக அளவில் பல நாட்டு அறிஞர்களும் கலந்து கொண்ட நிகழ்வில் இந்தியா சார்பாக சுவாமி விவேகானந்தர் கலந்து கொண்டார். அவர் பேசுவதற்கு முன்னர், அவரது தோற்றம், உடை மற்றும் நிறத்தைப் பார்த்து எள்ளி நகையாடிய அனைவரும், ‘அமெரிக்க சகோதர சகோதரிகளே’ என அவர் தன் உரையைத் துவக்கியதும் வாயடைத்து நின்றனர். அவர் பேசப் பேச, மற்ற அனைத்தும் மறந்து அவரது வார்த்தைகள் மட்டுமே அந்த இடத்தை ஆக்கிரமித்தது. அவரது சிந்தனைகள் செவி வழியே அனைவரது இதயங்களை சென்றடைந்தன. சுவாமி விவேகானந்தர், விவேகம் இருந்தால், வெற்றி நிச்சயம் என உலகுக்கு உணர்த்திய நாள் அது.
கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் அது 1902 ஆம் வருடம், ஜூலை மாதம் நான்காம் தேதி. தேவிக்கு மிகவும் பிடித்தமான வெள்ளிகிழமை நாள். அதிகாலை எழுந்து கொண்ட சுவாமி விவேகானந்தர், வழக்கத்திற்கும் மாறாக கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் வரை தனித்திருந்து தியானம் செய்தார். பின் தேவியைக் குறித்து சில பாசுரங்களைப் பாடினார். காலையில் சக சீடர்களுடன் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தார். பின் என்றும் இல்லாத அதிசயமாக மதியம் உணவுக் கூடத்தில், அனைத்து சகோதரத் துறவிகளுடனும், சீடர்களுடனும் ஒன்றாகச் சேர்ந்து அமர்ந்து உணவு உண்டார். பின் சிறிது நேரம் அவர்களுடன் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருந்தார். அடுத்து பிரம்மச்சாரிகளுக்கும், இளந்ததுறவிகளுக்கு கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம் வரை வேதாந்த பாடம் நடத்தினார். வடமொழி இலக்கணத்தைக் கற்பித்தார். மாலை நேரம் ஆனதும் சக துறவியான பிரேமானந்தருடன் உலாவுவதற்காக வெளியே சென்றார். வெகு நேரம் உலாவி விட்டு வந்த பின் சக சீடர்களுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பின் தனது அறைக்குச் சென்ற அவர், தான் தனித்து அமர்ந்து தியானம் செய்யப் போவதாகவும், தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் சீடர்களிடம் கேட்டுக் கொண்டார். அதன்படியே தனது அறைக்குள் சென்று தியானத்தில் ஈடுபட்டார்.
சிறிது நேரம் சென்றது. அப்போது இரவு எட்டு மணி இருக்கும். வெளியே மற்ற சீடர்கள் அமர்ந்து வேதபாராயணம் செய்து கொண்டிருந்தனர். தன் சீடர் ஒருவரை உள்ளே அழைத்த விவேகானந்தர், அறையின் ஜன்னல் கதவுகளைத் திறந்து விடுமாறு சொன்னார். கங்கை நதியைப் பார்த்தவாறே சிறிது நேரம் உட்கார்ந்து தியானம் செய்தார். பின் தான் படுத்துக் கொள்ளப் போவதாகவும் சற்று நேரம் தமக்கு விசிறிக் கொண்டிருக்குமாறும் சீடரிடம் வேண்டிக் கொண்டார். பின் மெல்லப் படுக்கையில் சாய்ந்தார். சற்று நேரம் சென்றிருக்கும். மூச்சை ஆழமாக இழுத்து வெளியே விட்டார் சுவாமி விவேகானந்தர். அதுவே அவரது இறுதி மூச்சாய் அமைந்தது. அதன் பிறகு அவரது உடலிலிருந்து எந்தஅசைவுமில்லை. சலனமுமில்லை. சீடரோ அதை அறியாது தொடர்ந்து விசிறிக் கொண்டே இருந்தார்.
ஆனால் அதே சமயம் சென்னையில் தியானத்தில் அமர்ந்திருந்த ராமகிருஷ்ணானந்தரின் காதுகளில் அந்தக் குரல் ஒலித்தது. “” சசி, நான் என் உடம்பை விட்டுவிட்டேன்!””. அது சுவாமி விவேகானந்தரின் குரல் தான் என்பதையும், அவர் மறைந்து விட்டார் என்பதையும் உணர்ந்த ராமகிருஷ்ணானந்தர் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானார். பின் வெகுநேரம் கழித்தே சுவாமிகள் சமாதி நிலை எய்திவிட்ட விஷயம் பேலூரில் உள்ள மற்ற சீடர்களுக்குத் தெரிய வந்தது. சொல்லொணா வேதனையுடன் அவர்கள் அவரது திருவுடலைச் சூழ்ந்து நின்றனர். சோகத்துடன் அவரது உடல் சமாதிக்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தனர். சுவாமி விவேகானந்தருக்கு அப்போது 39.
நம் நாட்டில் அந்த மாமனிதர் அவதரித்ததற்கு நாம் பெருமைப் படும் அதே நேரம், அவர் காட்டிய வழியைப் பின்பற்றி நம் வாழ்வையும் ஒரு சரித்திரமாக மாற்றுவோம்.
